தமிழக செய்திகள்

சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்

கொள்ளிடம் பகுதியில் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்கால்களான புது மண்ணியாறு, தெற்கு ராஜன்,பொறை உள்ளிட்ட வாய்க்கால்கள் மூலம் பாசனம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பிரதான வாய்க்கால்களில் இருந்து 100-க்கணக்கான சி மற்றும் டி பிரிவு பாசன கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று விளைநிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. கடந்த ஆண்டு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இந்த சிறு பாசன கிளை வாய்க்கால்கள் பெரும்பாலும் தூர்ந்து தண்ணீர் தொடர்ந்து வயல்களுக்கு சென்று சேர முடியாத நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கொள்ளிடம் பகுதியில் உள்ள பிரதான பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி முழுமை பெற்று வருகின்றன. மேலும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை இந்த ஆண்டிலிருந்து வேளாண் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் பாசன வாய்க்கால்கள் சென்ற ஆண்டை விட நன்கு தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு வருகின்றன. தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடைமடை பகுதியான கொள்ளிடம் பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேர கால தாமதம் ஆகலாம்.

முழுமையாக தூர்வார வேண்டும்

ஆனால் தண்ணீர் வந்து சேர்வதற்குள் சி மற்றும் டி பிரிவு பாசன கிளை வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்ற முழு வீச்சில் நீர்வளத்துறை அதிகாரிகளும் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிறு பாசன கிளை வாய்க்கால்கள் சில இடங்களில் முழுமையாக தூர் வாரும் பணி முடிவு பெறவில்லை என்றும் விவசாயிகள் சார்பில் தெரிவித்து வருகின்றனர்.

சிறு பாசன கிளை வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரினால் தான் விளை நிலங்களுக்கு எளிதில் பாசன வசதி கிடைக்கும் மற்றும் அதிக மழை பெய்யும் காலத்தில் வயல்களில் தேங்கும் மழை நீர் எளிதில் வெளியேறும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இன்னும் 10 நாட்களுக்குள்ளாக அனைத்து பாசன கிளை வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.