சென்னை,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 27 அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் 30 அன்றும் நடக்கின்றது.
இந்நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது .
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் பெதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர் சஞ்சய்தத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.
நாடாளுமன்றத்தேர்தலை போல், உள்ளாட்சித்தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனக் கூறி முகுல் வாஸ்னிக் வாக்கு சேகரித்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பெய்யாமெழி, திமுக வேட்பாளர்களை ஆதரித்து, துப்பாக்கி தெழிற்சாலை ரவுண்டானா பகுதியில் வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் புங்கம்பாடியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தராசன், உள்ளாட்சித் தேர்தல் முடிவு வந்த மறுநாளே ஒவ்வெரு குடும்ப அட்டைக்கும் பெங்கல் பரிசு வழங்கப்படும் எனக்கூறி வாக்குசேகரித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரண்யா ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையடுத்து பாட்ஷா படத்தில் வரும் ஆட்டோக்காரன் பாடலை ஒலிக்க செய்து வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் அருகே அடியனூத்து பஞ்சாயத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை பெண் வேட்பாளர் நித்யா, மேள - தாளங்கள் முழங்க வாக்கு சேகரித்தார். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜீவானந்தம் தமது சின்னமாக ஆட்டோ சின்னத்திற்கு நூறு ஆட்டோக்களில் ஊர்வலமாக சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடலூர் மாவட்டத்தில் கோண்டூர் மற்றும் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் அமைச்சர் எம்.சி. சம்பத்தும் அதிமுக செய்தி தொடர்பாளரான வைகைச்செல்வனும் இணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடியில் பிரசாரம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வாக்காளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதே போல் கலசப்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.
ஆரணி ஓன்றியங்களில் திரு.வி.க.நகர் எம்.எல்.ஏ.வும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான தாயகம் கவி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து, குன்னத்துர், ஒண்ணுபுரம், அத்திமலைபட்டு, அம்மாபாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும் தி.மு.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
கடலூர் மாவட்டத்தில் வாக்கு சாவடிகளுக்கு தேவையான 72 வகையான பொருட்களை அனுப்புவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல் புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1596 வாக்குச்சாவடி மையங்களில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தேவையான ஓட்டுப் பெட்டிகள், ஓட்டுச் சீட்டுகள், முத்திரை, அழியாத மை, வாக்காளர் பட்டியல், மெழுகுவர்த்தி, அரக்கு, பிளேடு உள்ளிட்ட 72 வகையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் இந்த பொருட்களை வாக்குச்சாவடிக்கு தகுந்தவாறு பிரித்து வைத்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 27-ம் தேதியும் சேலம் உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில் 30-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகளை தனித்தனியே பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது.
வாக்குச்சாவடி மையங்களும் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருமருகல், கொள்ளிடம், செம்பனார்கோவில், சீர்காழி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2003 வாக்குச் சாவடி மையங்களில் முதல்கட்டமாக வரும் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பெட்டி, மை, அரக்கு, பூத் ஸ்லிப், வாக்குச்சீட்டு, பசை, நூல்கண்டு, கட்டுக்கம்பி, சாக்கு, பேனா, பென்சில், குத்தூசி உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளுக்கு 63 வாகனங்களும், காவல்துறையினருக்கு 12 வாகனங்களும், பறக்கும் படையினருக்கு 80 வாகனங்களும் என 153 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வாகனங்களுக்கான உத்தரவு ஆணை, டோக்கன், ஓட்டுநர் அடையாள அட்டைகள் ஆகியவை வழங்கப்பட்டன. டீசல் கட்டணம், வாடகை ஆகியவற்றுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் வாக்குப் பதிவுக்கான பொருட்கள் நாளை காலை வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு ஆரணி, மேற்கு ஆரணி ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் இரண்டாம் கட்டத்தில் தான் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி ஆரணி கோட்டை மைதானத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு வகுப்பறைகளில் தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.