தமிழக செய்திகள்

குடிநீர் குழாய் அடியில் உடைந்த சிமெண்டு தரை தளம் சீரமைக்கப்படுமா?

குடிநீர் குழாய் அடியில் உடைந்த சிமெண்டு தரை தளம் சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே குடிநீர் குழாய் அடியில் உடைந்த சிமெண்டு தரை தளம் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடைந்த சிமெண்டு தரை தளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. மேலும் மக்கள் நின்று தண்ணீர் பிடிப்பதற்காக, குடிநீர் குழாய் கீழ்பகுதியில் சிமெண்டு மூலம் தரைத்தளம் கட்டப்பட்டது. இதனால் சேகரை மாரியம்மன் கோவில் தெரு, சத்தரத்தடி தெரு, பள்ளிக்கூடத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் குடிநீர் குழாயை தண்ணீர் பிடிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குடிநீர் குழாய் கீழ்பகுதியில் அமைக்கப்பட்ட சிமெண்டு தரைதளம் உடைந்து சிதறி கிடக்கிறது.

சீரமைக்க வேண்டும்

மேலும் கற்கள் மற்றும் குப்பைகள் சூழ்ந்து இருப்பதாலும், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாலும் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரிப்பதாகவும், குடிதண்ணீரில் அசுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாய் தரைதளம் மற்றும் தேங்கி நிற்கும் கழிவுநீர், குப்பைகளை அகற்றி சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.