தமிழக செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சட்டமன்ற ஜனநாயகத்தை சென்னை ஐகோர்ட்டு காப்பாற்றி இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்து சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்சினைகளையும் சட்டமன்றத்தில் எழுப்பும் உரிமையையும் சபாநாயகர் காப்பாற்றத் தவறிவிட்டாலும், சென்னை ஐகோர்ட்டு அந்த உரிமையை சட்டப்பூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

கேன்சரை உருவாக்கும் குட்கா விற்பனையைத் தாராளமாக அனுமதித்து அதில் பங்கேற்ற அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழலை நாட்டு மக்களுக்குத் தெரிவித்திடவே குட்கா பாக்கெட்டுகளை எடுத்துச்சென்றதை மறைத்து, நீதி வழுவிய முறையில் சபாநாயகர் மூலமாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய சதிச் செயலில் இறங்கியது அ.தி.மு.க. அரசு. அதை இந்தத் தீர்ப்பு தகர்த்தெறிந்து இருக்கிறது. சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பை, தி.மு.க. சார்பில் மனதார வரவேற்று மகிழ்கிறேன்.

இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் வாதாடி, சிறப்பான இந்தத் தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்த கட்சியின் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் என்.ஆர்.இளங்கோ எம்.பி. ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்குதடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல்; தமிழகத்திற்கும் தலைகுனிவு ஆகும்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் தாராளமாக விற்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியின் மீது உரிமை மீறல் விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு பாய்ந்த அரசு, குட்கா விற்பனையை கட்டுப்படுத்துவதில் பதுங்கிவிட்டது. அதனால் குட்கா எனும் சமூகத் தீமையின் போக்குவரத்தும் விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயக உரிமைக்கு கிடைத்த மகத்தான வெற்றி. இது ஒரு நல்ல முன்னோட்டம். என்று கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்