கயத்தாறு,
சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை கங்கா காவிரி தெருவை சேர்ந்தவர் அஜய்குமார்(வயது 44). தொழில் அதிபர். இவர், பொக்லைன் எந்திரம் விற்பனை ஷோரூம் மற்றும் பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார்.
சென்னை மடிப்பாக்கம் பாலையா கார்டன் பிருந்தாவனம் தெருவை சேர்ந்தவர் சத்ய நாராயணன்(35). இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பாபு பிரசாத்(37). இவர் தனியார் கார் விற்பனை ஷோரூமில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
இவர்கள் நெல்லை அருகே நாங்குநேரி பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக நேற்றுமுன்தினம் இரவில் ஒரு காரில் சென்னையில் இருந்து நாங்குநேரிக்கு புறப்பட்டனர்.
அப்போது அஜய்குமார் தன்னுடைய மகன் மிதின் அஜயையும்(11) அழைத்து வந்தார். சத்ய நாராயணன் காரை ஓட்டினார்.
4 பேர் பலி
நேற்று காலை 7.45 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் நாற்கர சாலை ஓடைப்பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கி உருக்குலைந்தது.
இந்த விபத்தில் தொழில் அதிபர் அஜய்குமார், அவருடைய மகன் மிதின் அஜய், பாபு பிரசாத் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிய சத்ய நாராயணன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய சத்ய நாராயணனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.