தர்மபுரி,
கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கா நகரை சேர்ந்தவர் வீரா (வயது 42). இவர் அங்குள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி உமாலட்சுமி (32). இவர்களுடைய மகள் சுஷ்மிதா (13). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் உமாலட்சுமி தனது கணவர் மற்றும் மகளுடன் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று மாலை கார் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். காரை வீரா ஓட்டிச்சென்றார்.
கிணற்றில் பாய்ந்த கார்
தர்மபுரி மாவட்டம் பொன்னேரி என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற லாரி ரோட்டில் தேங்கி நின்ற மழைநீர் பள்ளத்தின் வழியாக சென்றது. பள்ளத்தில் லாரி டயர் இறங்கியதில் தண்ணீர் சாலையில் பீய்ச்சி அடித்தது.
அப்போது பின்னால் வந்த கார் கண்ணாடி முழுவதும் தண்ணீர் சிதறியது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த செவத்தான் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பாய்ந்தது.
அப்போது காரின் கதவு திறந்ததால் உள்ளே இருந்த உமாலட்சுமி நீந்தி மேலே வந்துள்ளார். பின்னர் அவர் அருகில் இருந்தவர்களிடம் கிணற்றில் கார் விழுந்தது குறித்து தகவல் தெரிவித்து விட்டு மயக்கமடைந்தார். இதுபற்றி அறிந்த காரிமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தந்தை-மகள் பலி
மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தந்தை, மகள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிந்தது. இதையடுத்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.