புதுக்கோட்டை சிப்காட் அருகே நேற்று காலை சரக்கு வேனில் மரம் வெட்டும் தொழிலாளர்கள் நச்சாந்துபட்டிக்கு வேலைக்காக சென்றனர். முள்ளூரை சேர்ந்த குமார் (வயது 50) சரக்கு வேனை ஓட்டினார். இந்த நிலையில் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் அருகே தஞ்சாவூர் பிரிவு ரோட்டின் அருகே சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சரக்கு வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் குமார், முத்துகோன்பட்டியை சேர்ந்த புஷ்பம் (45), சித்ரா (45) உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான சரக்கு வேன் மீட்கப்பட்டது. விபத்தில் சரக்கு வேனின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.