மத்திகிரி:
ஓசூர் மத்திகிரி நவதி அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இங்கு போச்சம்பள்ளி அடுத்த வடமலப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 38) என்பவர் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி முதல் கடந்த மே 11-ந் தேதி வரை உள்ள காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகைக்கு நகையை அடமானம் வைத்து நகைக்கடன் வாங்கியது போல் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.21 லட்சத்து 62 ஆயிரம் மோசடி செய்ததாக தெரிகிறது.
இதையறிந்த வங்கி மேலாளர் நகை மதிப்பீட்டாளர் வெங்கடேசனிடம் விசாரித்தார். இதையடுத்து ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 749-ஐ திருப்பி செலுத்திய நகை மதிப்பீட்டாளர் வெங்கடேசன் மீதி பணத்தை செலுத்த மறுத்து விட்டார். இதுகுறித்து வங்கி மேலாளர் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நகை மதிப்பீட்டாளர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.