சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, பொங்கல் பரிசு தொகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 25 சதவீத கூடுதலாக வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சங்கம், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, இதே கோரிக்கையுடன் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தபோது, கோரிக்கையை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் பொங்கல் பரிசு என்பது திட்டமல்ல எனக் கூறி கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது. ஆனால், திட்டமில்லாமல், பொங்கல் பரிசு வழங்க முடியாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், பொங்கல் பரிசு குடும்பத்துக்கு வழங்கப்படுகிறதே தவிர, தனி நபர்களுக்கு அல்ல என்பதால், மாற்றுத்திறனாளிகள் சட்டப்பிரிவின் கீழ் இத்திட்டத்துக்கு பொருந்தாது என்றார்.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.