திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 17-ந்தேதி பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் அசுத்தம் செய்து, கழிவறை, குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தினர்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வருவாய்துறை, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு மாணவர்கள் வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபா, தாசில்தார் மதன் ஆகியோர் மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் அசுத்தம் செய்த நபர்களை டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தி இருப்பதாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தெரிவித்தார்.