சென்னை,
தமிழகத்தில் கடந்த வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதேபோன்று சட்டசபை இடைத்தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது.
இதில், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கடந்த வருட ஏப்ரலில், கரூர் கலெக்டராக இருந்த அன்பழகன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, மிரட்டல் விடுத்தனர் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி அன்பழகன், தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தி.மு.க.வினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். 1 மணி நேரம் போராட்டம் நடத்திய நிலையில், போலீஸ் எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தேன். அவர் வந்து என்னை மீட்டார். எனது உயிருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதன்மீது சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் விசாரணையில், தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிர்மல் குமார் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியுள்ளார்.