சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தபால் மூலம் வாக்களிக்க கூடியவர்களின் பட்டியலை தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்தீப் பேனர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில், தபால் வாக்கு செலுத்த அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு ஒரு வாரத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மார்ச் 29 ஆம் தேதி அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டவர்களின் பட்டியலை மார்ச் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்னும் வழங்காத நிலையில், தபால் வாக்கு செலுத்துபவர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்தீப் பேனர்ஜி தலைமையிலான அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்திருந்தால், அந்த மனு குறித்து எதிர்தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் நாளையே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.