மதுரை,
மதுரையைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரை தெப்பக்குளம் காவல்நிலையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருவதாகவும், அதனை சீர் செய்வதற்காக காலி செய்து தர உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த காவல்நிலைய கட்டடம் 115 ஆண்டுகள் பழமையானது என்றும், மனிதர்கள் வாழ தகுதியற்றது என்று சான்று வழங்கப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் புதிய இடமாற்றம் செய்யும் வரை காவல்நிலையத்தை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், காவல்நிலையம் இடிந்து விபத்து ஏற்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ காவல்துறையே பொறுப்பேற்றுக் கொள்ளும் என மதுரை காவல் ஆணையர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.