கோவை,
திருப்பூரை சேர்ந்தவர் சூர்யா (வயது 35). இவர் ரவுடிபேபி சூர்யா என்ற பெயரில் டிக்டாக் செய்து பிரபலமானவர். இவருடைய நண்பர் மதுரையை சேர்ந்த சிக்கந்தர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏராளமான டிக்டாக் வீடியோக்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர். யூடியூப் சேனலை தொடங்கியும் வீடியோக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் பெண் ஒருவரை ஆபாசமாக பேசிய புகாரில், மதுரையில் பதுங்கி இருந்த சூர்யா, சிக்கந்தர் இருவரையும் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரவுடிபேபி சூர்யா மீது பல்வேறு மாவட்ட போலீசில் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்று ஆபாசமாக பேசி யூடியூப் சேனலில் அவர் பதிவு செய்து வருவதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையில் அவரும், சிக்கந்தரும் நடத்தி வந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.