நீடாமங்கலத்தில் தண்ணீர் இன்றி கருகிய 600 ஏக்கர் குறுவை பயிர்களை வயல்களில் கால்நடைகள் மேய்ந்து வருகிறது. மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கருகிய 600 ஏக்கர் குறுவை பயிர்கள்
நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் விவசாயிகள் நிலத்தடி நீரில் மின்மோட்டாரை கொண்டு இடைவிடாமல், வயலை தரிசாக போடாமல் மூன்று போகம் சாகுபடியை தொடங்கினர். நீடாமங்கலம் மேற்குப்பகுதியில் பல்வேறு கிராமங்களில் 400,500 அடிவரை போர் அமைத்து நிலத்தடி நீரை மின் மோட்டாரை கொண்டு நடவு பணியை விவசாயிகள் இடை விடாது செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சாகுபடி முடிந்து குறுவை நடவுப்பணியை மின்மோட்டாரில் தொடங்கினர்.
இதில் நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி, நகர், எடக்கீழையூர், நாவல் பூண்டி உள்ளிட்ட பல கிராமங்களில் வயல்களில் 600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. கருகிய பயிர்களை வயல்களில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் மேய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நீடாமங்கலம் வேளாண் கோட்ட வேளாண் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு தக்க அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கியிருந்தால் இது போன்ற இழப்புகள் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்காது. இனி வருங்காலங்களில் வேளாண்துறையினர் சாகுபடி நிலங்களில் கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு தக்க தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என்றனர்.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் கூறுகையில், விவசாயிகள் அதிக ஆழத்தில் போர் அமைத்து நிலத்தடி நீரில் இடைவிடாது சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் உப்பு நீர் வந்து நடவு வயலில் பயிர்களை வளரவிடாமல் தடுத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.