சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு முடிந்த நிலையில் அதனை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம் என தி.மு.க. சமீபத்தில் ஈரோட்டில் நடந்த மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. சார்பில் அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் தி.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டும் தே.மு.தி.க. கலந்து கொள்ளவில்லை.
கூட்டம் முடிந்து வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடையே பேசும்பொழுது, காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் 5ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.
தொடர்ந்து டெல்டா மாவட்டங்களிலிருந்து காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தவும் உள்ளோம். சென்னை வரும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
அனைத்து கட்சி கூட்டத்தினை தொடர்ந்து பச்சை துண்டு அணிந்து ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில், பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார். கைது செய்யப்பட்டாலும் போராட்டம் நடக்கும் என அவர் கூறினார். அவருடன் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் மற்றும் கி. வீரமணி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடன் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன், வீரமணி மற்றும் உதயநிதி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து தி.மு.க.வினர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.