சென்னை:
திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அழைப்பை ஏற்று, சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் சந்தித்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்கவும், காவிரி விவகாரத்தில் உடனடியாக தலையிடவும் பிரதமர் மறுத்தால், பேரவையை கூட்டுகின்ற செய்தியை அறிவிப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய கட்சியின் சார்பில் இருக்கின்ற 50 எம்.பி.க்கள், திமுக சார்பில் இருக்கின்ற 4 எம்.பி.க்கள், அத்துனை பேரும் ராஜினாமா செய்வோம், என அறிவித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என கூறினார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பேசுகையில், அதிமுக தலைமை உத்தரவிட்டால் தான் மட்டுமல்ல அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்யத் தயார் என தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா? பாராளுமன்றத்தில் பிற கட்சிகளின் ஆதரவை திரட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே சிறந்த வழியாகும் என கூறினார்.