தண்ணீர் அளவு அதிகரிக்க வாய்ப்பு
கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதையடுத்து அந்த அணையில் இருந்து கடந்த 4-ந்தேதி 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதையடுத்து மதியம் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியும், மாலையில் 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடியும் என நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு தற்போது வினாடிக்கு 1 லட்சத்து 53 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று(திங்கட்கிழமை) மாலைக்குள் தண்ணீர் வரத்து அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் திருச்சி மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
வயல்களில் வெள்ளநீர்...
தற்போது காவிரி ஆற்றில் நேற்று காலை வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் வந்தது. இதனால் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து 4-வது நாளாக இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. மேலும் ஸ்ரீரங்கம் கும்பகோணத்தான் சாலையில் உள்ள ஸ்ரீராம் நகர் பகுதி கொள்ளிடம் கரையோர பகுதிகளான அழகிரிபுரம், வடக்குவாசல் கொள்ளிடம், பஞ்சக்கரை பகுதிகளில் தண்ணீர் கரை தொட்டு செல்கிறது.
ஏற்கனவே 81 குழந்தைகள் உள்பட 311 பேர் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருச்சியை அடுத்த கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி, கிளிக்கூடு, திருவளர்ச்சோலை, கம்பரசம்பேட்டை உள்ள கீதாபுரம் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை ஆகிய பகுதிகளில் வயல்களுக்குள் புகுந்த வெள்ளநீர் மெல்ல மெல்ல வடிந்து வருகிறது. இதில் ஜீயபுரம் அருகே முக்கொம்பு பகுதியில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு
இதையடுத்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முக்கொம்பு மேலணையில் காவிரியில் நீர்வரத்து மற்றும் காவிரி-கொள்ளிடம் ஆற்றில் நீர் வெளியேற்றத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது முக்கொம்பு மேலணைக்கு இன்று (அதாவது நேற்று) வினாடிக்கு 1 லட்சத்து 42 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூரில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டாலும் திருச்சி மாவட்டத்திற்கு வந்து சேர 18 மணி நேரம் ஆகும்.
பாதுகாப்பு பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது வரை எந்த உயிரிழப்பும் இல்லை. கல்லணை மற்றும் தொட்டியம் பகுதியில் உள்ள பயிரிடப்பட்டுள்ள வாழைகள் 4 நாட்கள் மூழ்கி இருக்கும் நிலையில், தண்ணீர் முழுவதுமாக குறைந்தால்தான் பாதிப்பு குறித்து மதிப்பிட முடியும், என்றார்.