சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த முழு அடைப்பு போராட்டத்தின்போது, சாலைமறியல், ரெயில்மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தின்போது சென்னை, வேலூர், திருச்சி உள்பட பல இடங்களில் பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. சாலை மற்றும் ரெயில்மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று பிற பகுதியிலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுபோன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 85,000 பேர் விடுவிக்கப்பட்டனர் என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் 41 பஸ்கள் உடைக்கப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக வேலூரில் 20 பஸ்கள் உடைக்கப்பட்டு உள்ளது, சென்னையில் 12 பஸ்கள் உடைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.