சென்னை,
சென்னையில் உள்ள சுங்கத்துறையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருபவர் ரமணி. இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து 2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 64 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு சொத்து சேர்த்தது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரமணி, அவரது மனைவி விஜயலட்சுமி, உறவினர் ஆதிகேசவலு ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
சொத்துகள் பறிமுதல்
இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி முருகன், குற்றம்சாட்டப்பட்ட ரமணிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், விஜயலட்சுமி, ஆதிகேசவலு ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தார்.
சட்டவிரோதமாக சேர்த்த 1 கோடியே 55 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.