சென்னை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை 1996ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22ந்தேதி தூத்துக்குடியில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் பலியானது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றில் ஒரு வழக்கில் யாருடைய உத்தரவு பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையினருக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழக வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.