தமிழக செய்திகள்

மதுரை கிரானைட் கொள்ளை விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மதுரை கிரானைட் கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்று தெரிவித்த தமிழக அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதுரை கிரானைட் கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்று தெரிவித்த தமிழக அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்டனம்

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையே சீர் குலைத்த மதுரை மாவட்ட கிரானைட் கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

இது கிரானைட் கொள்ளையர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சி ஆகும். தமிழக அரசின் இந்த தவறான நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

கிரானைட் ஊழல் குறித்து விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், இதுகுறித்து சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு இவ்வாறு கூறியிருக்கிறது.

அரசுடமை

கிரானைட் கொள்ளையை தமிழகத்துக்கு எதிரான பொருளாதார போராகவே அரசு பார்க்க வேண்டும். எனவே இது குறித்து சி.பி.ஐ. தலைமையிலான பல்துறை சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

கிரானைட் நிறுவனங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்கள் உலகளாவிய ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். கிரானைட் குவாரிகளை அரசுடமையாக்கி, விதிகளின்படி, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து நியாயமான விலையில் விற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.