தமிழக செய்திகள்

மெரினா கடற்கரையில் நடந்த கலவரம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு வழக்கு

மெரினா கடற்கரையில் நடந்த கலவரம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு வழக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மெரினா கடற்கரையில் நடந்த கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மெரினாவில் கலவரம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம் கடந்த 23ந் தேதி வன்முறையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து சென்னை ஐகோர்ட்டில், மெரினா கடற்கரையில் வன்முறையில் ஈடுபட்டது இளைஞர்கள் அல்ல. போலீசார் தான் வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைத்து தேவையில்லாத கலவரத்தை ஏற்படுத்தினார்கள். இதற்கு போதிய ஆதாரம் உள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திருவல்லிக்கேணியை சேர்ந்த பி.குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

30ந் தேதி விசாரணை

அதேபோல, கலவரத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதை போலீசார் தடுக்கின்றனர். அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவேண்டும் என்று மற்றொரு வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்குகளை வருகிற 30ந் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், இந்த வழக்குகளுக்கு தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இருதரப்புக்கும் வாய்ப்பு

அப்போது மனுதாரர் குமாரின் வக்கீல் எழுந்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்கவில்லை என்றால், ஆதாரங்கள் அனைத்தையும் தமிழக போலீசார் அழித்துவிடுவார்கள் என்றார்.

அதற்கு நீதிபதி, கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கடந்த 24ந் தேதி தான் அதிகாரிகளுக்கு மனுதாரர் தரப்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கைக்கு கிடைத்திருக்காது. அதற்குள் இடைக்கால உத்தரவு எப்படி பிறப்பிக்க முடியும்? இருதரப்புக்கு வாய்ப்பு கொடுத்த பின்னர் தான் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும் என்று கருத்து தெரிவித்தார்.

இதன்பின்னர் மற்றொரு மனுதாரரின் வக்கீல் எழுந்து, கலவரத்தில் படுகாயமடைந்த இளைஞர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு சிகிச்சை வழங்கவிடாமல் போலீசார் தடுக்கின்றனர் என்று கூறினார்.

தடுக்க முடியாது

அதற்கு பதில்அளித்த நீதிபதி, காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவேண்டும் என்று ஏற்கனவே நான் உத்தரவிட்டுள்ளேன். அதன்படி முறையான சிகிச்சை வழங்கப்படும் என்று அட்வகேட் ஜெனரல் இந்த கோர்ட்டுக்கு உறுதி அளித்துள்ளார். அப்படி இருக்கும்போது, முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால், யாருக்கு சிகிச்சை வழங்கவில்லை, எந்த டாக்டர் சிகிச்சை வழங்க மறுத்தார் என்பது குறித்து பெயர், அரசு ஆஸ்பத்திரி விவரங்களுடன் உடனே மனுவை தாக்கல் செய்யுங்கள். அந்த மனுவின் நகலை அட்வகேட் ஜெனரலிடம் ஒப்படையுங்கள். அட்வகேட் ஜெனரல் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

கால அவகாசம்

வக்கீல் அவ்வாறு விவரங்களுடன் மனுவை கொடுத்தால், தகுந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அட்வகேட் ஜெனரல் நீதிபதியிடம் உறுதியளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கிற்கு எல்லாம் விரிவான பதிலை அளிக்க உள்துறை செயலாளர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு போதிய காலஅவகாசம் வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் விசாரணையை 30ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று கருத்து தெரிவித்து உத்தரவிட்டார்.