சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டிலும், அலுவலகத்திலும் மத்திய புலனாய்வுத் துறையினர் (சி.பி.ஐ.) சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
மத்திய பா.ஜ.க. அரசை தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக ப.சிதம்பரம் விமர்சித்து வந்ததை சகித்துக்கொள்ள முடியாத நிலையில் அவரை அச்சுறுத்துவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
பா.ஜ.க.வின் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி என்றுமே தயார் நிலையில் இருக்கிறது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை அடக்கிவிடலாம் என நினைக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க.வை விமர்சித்து வருகிற ப.சிதம்பரத்தின் செயல்பாடுகளை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்கிற ப.சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை குறிவைத்து மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத் துறை சோதனை, அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. சோதனை என்று தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை குறிவைத்து இதுபோன்ற மிரட்டல்களை பா.ஜ.க. மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
மோடி அரசின் இந்த வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் எந்த காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள் என்பதோடு, வருங்காலங்களில் இதற்கு காரணமானவர்கள் வருத்தப்பட நேரும் என்பதனையும், அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாதிரியான மிரட்டல் சோதனைகள் தொடருமானால், மக்கள் இந்த அராஜக பா.ஜ.க. அரசை புறக்கணிப்பார்கள் என்பது திண்ணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.