சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தினத்தந்தி நிருபருக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க. கூட்டணி எப்போது இறுதி செய்யப்படும்?
பதில்:- ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். வலிமையான, நிலையான இந்த கூட்டணி தொடர்கிறது.
கேள்வி:- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 14-ந்தேதி தமிழகத்துக்கு வரும்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? சந்திப்பு நிகழும் பட்சத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட இருக்கிறதா?
பதில்:- தமிழகத்துக்கு அமித்ஷா வருவது குறித்து எங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. அந்த தகவல் வந்த பிறகு தான் இதுதொடர்பான விவரங்கள் தெரியும்.
கேள்வி:- தமிழகத்தில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதா?
பதில்:- தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி கட்சிகளுடன் அமர்ந்து பேசி, அதன் சாராம்சங்களை கட்சி தலைமைக்கு தெரிவிப்போம். அதன் பிறகு எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை எங்கள் கட்சி தலைமை அறிவிக்கும்.
கேள்வி:- அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரும் அவரே இருப்பாரா?
பதில்:- தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவித்துவிட்டது. அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-அமைச்சர் வேட்பாளரை விரைவில் அறிவிக்கும்.
கேள்வி:- பா.ஜ.க. சார்பில் அனைத்து பூத் கமிட்டிகளுக்கும் ஆள் போடப்படுமா?
பதில்:- 60 ஆயிரம் பூத்களில் தலா 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. தை 1-ந்தேதி முதல், 100 நாட்களில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தொடங்க உள்ளோம். தமிழக பா.ஜ.க. சார்பில் வருகிற 9, 10-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் நம்ம ஊர் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்று பொங்கல் வைப்பார்கள். இந்த விழாவில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி, நான், எங்கள் கட்சியை சேர்ந்த சினிமா பிரபலங்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.
கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு என்று தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுமா?
பதில்:- எச்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. அவர்கள் அளிக்கும் பரிந்துரையை நாங்கள் கட்சி தலைமைக்கு அனுப்புவோம். கட்சி தலைமை தேர்தல் அறிக்கையை இறுதி செய்த பின்னர் அறிவிப்போம் என்று எல்.முருகன் பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 38 பேர் கொண்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதாக, வெளியான தகவல் தவறானது. கட்சியிலும், கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்று சிலர் பொய்யாக வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.