சென்னை,
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நெல்லை, சிவகங்கை, காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் நாளை 45-55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.