சென்னை,
உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய தினம் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தவிர தமிழகத்தின் வட கடலோரத்தில் உள்ள மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.