சென்னை,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்றைய தினம் கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட சில இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக அந்தமானில் நாளை (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது. மேலும் ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
நாளை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெறக் கூடும்.
தற்போதைய நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசியில் கன மழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
அதே சமயம் இன்றும், நாளையும் கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.