தமிழக செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கோவை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வடகிழக்கு பருவமழை காலம் தமிழகத்தில் தொடங்கியதில் இருந்து, பல இடங்களில் பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8-ந்தேதி வரை (நாளை மறுதினம்) அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்று (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதன் தொடர்ச்சியாக வருகிற 9-ந்தேதியன்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோபிசெட்டிபாளையம் 11 செ.மீ., ராசிபுரம் 8 செ.மீ., பேரையூர், சிவகாசி, சேலம், பெலாந்துறை தலா 7 செ.மீ., ஆத்தூர், விருதாச்சலம், கோவில்பட்டி, கயத்தாறு, திருச்செங்கோடு, ஸ்ரீமுஷ்ணம், பென்னாகரம், ஸ்ரீவில்லிபுத்தூர், மஞ்சளார், குப்பநத்தம், ஆழியார், கொடைக்கானல் தலா 6 செ.மீ., குமாரபாளையம், சின்னக்கல்லாறு தலா 5 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து