சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கோவை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று சுமார் 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.