சென்னை,
குமரி கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடும் வறட்சி
இந்த வருடம் பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனவேதனையில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
குமரி கடல்
இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மண்டல அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
குமரி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் வட தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிபொழிவு படிப்படியாக குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.