திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தற்காலிக இணை சார்பதிவாளர் உதய்சங்கர் என்பவர், வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமலேயே பணி செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் பொது மக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது, பத்திரத்தை விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கினார். மேலும் அவினாசி சார்பதிவாளர் ரகோத்தமன், தற்காலிக சார்பதிவாளர் உதய்சங்கர் ஆகியோரை மாற்ற ஆணையிட்டார்.
அமைச்சரின் உத்தரவுப்படி, ரகோத்தமன் மற்றும் உதய்சங்கர் ஆகிய இருவரும் மாற்றப்பட்டு இளங்கோ, வெங்கடசாமி ஆகியோர் புதிய சார்பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.