தாளவாடி
ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நுழைந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பொதுமக்கள்க அச்சம்.
10 வனச்சரகங்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் யானை அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதேபோல் புலி, சிறுத்தை போன்றவை கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய் போன்ற கால்நடைகளை கடித்து கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.
கண்காணிப்பு கேமரா
இந்த நிலையில் ஆசனூரை அடுத்த பங்களா தொட்டி கிராமத்துக்குள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. பின்னர் அந்த சிறுத்தையானது அந்த பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி வீட்டின் முன்பு நடமாடியது. இந்த காட்சி அவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சியை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர்.