செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள 480 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பற்றாக்குறையை அடுத்த ஆக்சிஜன் அளவை குறைவாக கொடுத்தாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில்கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கூறியதாவது:
நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவில் சரியான முறையில் விநியோகம் செய்யப்படாததால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆக்சிஜன் போதிய அளவு உள்ளது. தற்போது மருத்துவமனையில் 23000 கிலோ கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் டேங்கர்கள் உள்ளன. இதில் தினமும் 2.5 ஆயிரம் கிலோ மட்டுமே நோயாளிகளின் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என கலெக்டர் தெரிவித்தார்.