சென்னை,
சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ரிப்பன் கட்டடம், எழிலகக் கட்டடம், அண்ணாசாலை மற்றும் கோயம்பேடு மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” எனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு வகைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டடம், எழிலகக் கட்டடம், அண்ணாசாலை மற்றும் கோயம்பேடு மேம்பாலம் அருகில் உள்ளிட்ட முக்கியமான 4 இடங்களில் “தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா” 100 சதவீதம் வாக்களிப்போம், வாருங்கள் என்கிற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.