தமிழக செய்திகள்

கண்டுபிடிப்பு சாதனை தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டியலை வெளியிட்டார்

கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் 2-வது முறையாக சென்னை ஐ.ஐ.டி.க்கு முதல் இடம் கிடைத்து இருக்கிறது. இந்த தரவரிசை பட்டியலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

தினத்தந்தி

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் அல்லது சுயநிதி கல்லூரிகள், நிறுவனங்கள், தனியார் அல்லது சுயநிதி பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி, நிறுவனங்கள், மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் என 6 பிரிவுகளின் கீழ் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் (ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ.) வெளியிடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2020-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். இதில் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், இணை மந்திரி சஞ்சய் தோத்ரே, உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே, அகில இந்திய தொழில்நுட்பகல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே, கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மதிப்பீடு செய்யும் குழுவின் தலைவர் பி.வி.ஆர்.மோகன்ரெட்டி, கல்வி அமைச்சகத்தின் தலைமை கண்டுபிடிப்பு அதிகாரி அபே ஜெரி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். அதில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரிவுகளில் 674 நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பிரிவுகளின் கீழ் 496 நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

கல்விக்கான இதயத்துடிப்பாக புதிய கண்டுபிடிப்புகள் உருவாகவேண்டும். சிறப்பானவற்றை உருவாக்குவதற்கான தேடல் முக்கிய விதிமுறையாக இருக்கவேண்டியது அவசியம். தரவரிசையில் உயர்ந்த இடங்களைப்பிடித்த கல்வி நிறுவனங்களை நான் பாராட்டுகிறேன். சிறப்பான இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களின் தலைமையை மட்டுமல்ல, அதில் பணியாற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என்று அனைவரையும் நான் வெகுவாக பாராட்டுகிறேன்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசை பட்டியல், இந்திய கல்வி நிறுவனங்களை உலகளாவிய சிறந்த கல்வி நிறுவனமாக மாற மேலும் ஊக்குவிக்கும். தரவரிசை பட்டியல், உயர்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் வழக்கமான பாதையில் இருந்து மாறுபட்டு, உயர்தர ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோரை உருவாக்குதலில் கவனம் செலுத்தவே இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

எண்ணிக்கையைவிட, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கண்டுபிடிப்புகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான சவால்களை எதிர்கொள்ளவும், அதற்கு தேவையான தீர்வுகளை உருவாக்கவும், தன்னம்பிக்கை உதவுகிறது. சோதனைகள், ஆராய்ச்சிக்கான சாதகமான சூழலை உருவாக்க, இந்திய உயர்கல்வி முக்கிய பங்காற்ற வேண்டியது அவசியம். உள்நாட்டிலேயே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதிலும் இந்திய உயர்கல்வி அமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது