பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் 
தமிழக செய்திகள்

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா - ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2023-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2027 ஜனவரி 16 முதல் 18 வரை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பன்னாட்டு புத்தக திருவிழா

பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (21.11.2026) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2027-க்கான இலச்சினை வெளியிடப்பட்டு, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பதிப்பாளர்கள் சங்கமான தாய்லாந்து பதிப்பாளர்கள் சங்கம் எனும் நிறுவனம் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2027 நிகழ்வில் மதிப்புறு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இலக்கிய முகவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கி வைக்கப்பட்டது. மேலும் அமைச்சர், சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2027 ஜனவரி 16 முதல் 18 வரை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது என்பதையும் அறிவித்தார்கள்.

தமிழ் இலக்கியங்களை உலகறிய செய்யும் பாலம்

தமிழ் மொழியின் தொன்மையையும் இலக்கிய செழுமையையும் உலகறிய செய்யும் நோக்குடன், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் ஒருங்கிணைப்பில், சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2023-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒரு மாநில அரசால் நடத்தப்படும் முதல் பன்னாட்டு புத்தகத் திருவிழா என்ற பெருமைக்குரிய சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா, தமிழ் நூல்களை உலக மொழிகளிலும், உலக மொழிகளின் சிறந்த நூல்களை தமிழிலும் கொண்டு சேர்க்கும் பாலமாக திகழ்கிறது.

பன்னாட்டு அரங்கம்

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா என்பது புத்தக உரிமை வர்த்தகம், பன்னாட்டு மாநாடுகள், மொழிபெயர்ப்பு மானியங்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன், உலகெங்கிலுமுள்ள பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் பன்னாட்டு அரங்காகவும் விளங்குகிறது.

மொழிபெயர்ப்பு மானிய திட்டம்

தமிழை உலகளாவிய இலக்கிய அரங்கில் முன்னிறுத்துவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானிய திட்டம், இலக்கிய முகவர்களுக்கான பயிற்சி, சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஆகியவை இந்த முயற்சிகளின் முக்கிய அங்கங்களாகும். இவற்றின் வழியாகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் உலக வாசகர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன. சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2027-ல் உலகம் முழுவதிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் (கூ.பொ.) ஷஜீவனா, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (கூ.பொ.) ஸ்ரீதேவி பாஸ்கர், தமிழ் பதிப்பாளர்கள்/விநியோகஸ்தர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT