தமிழக செய்திகள்

சென்னை: தரமணி அருகே ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பல்நோக்கு மையம்; மேயர் பிரியா அடிக்கல் நாட்டினார்

முதல் தளத்தில் 82.20 ச.மீ. பரப்பளவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படுவதன் மூலம் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் பயன்பெற உள்ளனர்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 178-ம் வார்டுக்கு உட்பட்ட தரமணி 5சி பேருந்து நிறுத்தம் அருகில் மேயரின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பல்நோக்கு மையம் கட்டிடம் கட்டுவதற்கு, மேயர் ஆர்.பிரியா, இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளும், பொது சுகாதார பணிகளும், சேவை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேயரின் மேம்பாட்டு நிதியில் பொதுமக்கள் மிகவும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி தேர்வு செய்யப்படுகிறது.

அவ்வாறாக மேயரின் மேம்பாட்டு நிதியில் கட்டப்படவுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தில் தரைத்தளத்தில் 82.20 ச.மீ. பரப்பளவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கால்நடை மருத்துவ மையமும், முதல் தளத்தில் 82.20 ச.மீ. பரப்பளவில் உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுவதன் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பயன்பெற உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அப்தாப் ரசூல், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ், மாமன்ற உறுப்பினர் எஸ்.பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.