தபால்துறை  
தமிழக செய்திகள்

சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்

புகார்களை சாதாரண தபால் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

சென்னை,

சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை சார்பில், வாடிக்கையாளர்கள் குறைதீர்ப்பு முகாம் வருகிற அக்டோபர் 12-ந் தேதி (12.10.2026) காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேரடி விசாரணை

சென்னை 600017 என்ற முகவரியில் உள்ள சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இக்குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமிற்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் தலைவர் தலைமை தாங்கி, அஞ்சல் துறை சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட குறைகளை நேரடியாக கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண உள்ளார்.

முன்பதிவு அவசியம்

முகாமில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை, "மூத்த கண்காணிப்பாளர், சென்னை நகர மத்திய கோட்டம், சென்னை 600017" என்ற முகவரிக்கு வருகிற அக்டோபர் 9-ந் தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

என்னென்ன விவரங்கள் தேவை?

• தபால்/பார்சல் தொடர்பான புகார்: அஞ்சலிடப்பட்ட தேதி, நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநரின் முழு முகவரி, தேதியுடன் கூடிய ரசீது எண் ஆகிய முழு விவரங்கள் இருக்க வேண்டும்.

• சேமிப்பு கணக்கு / ஆயுள் காப்பீடு: அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு தொடர்பான புகாராக இருந்தால் கணக்கு அல்லது பாலிசி எண், பெயர், டெபாசிட் அல்லது காப்பீடு செய்தவரின் முழு முகவரி, சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர் மற்றும் ஏற்கனவே தபால் துறைக்கு அனுப்பப்பட்ட கடித விவரங்கள் இடம்பெற வேண்டும்.

முக்கிய நிபந்தனைகள்

வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள் குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் தெரிவித்து, அதற்கு முறையான தீர்வு காணப்படாத பழைய புகார்களை மட்டுமே இந்த முகாமில் தெரிவிக்கலாம். புதிய குறைகள் குறித்து இம்முகாமில் விசாரிக்கப்படாது.

கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்

புகார்களை சாதாரண தபால் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படும் கடிதங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாது. புகார் அனுப்பும் அஞ்சல் உறையின் மேல், "கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT