சென்னை,
சென்னை தூத்துக்குடி இடையே தினமும் நான்கு அல்லது ஐந்து விமான சேவைகள் இருந்தாலும் அவை அனைத்துமே பகல் நேர சேவைகளாகவே இருந்து வருகிறது. இதனால் இரு மார்க்கங்களில் இருந்தும் காலையில் பணி நிமித்தமாக பயணிப்பவர்கள் ஒரே நாளில் திரும்ப வேண்டும் என்றால் மிகவும் அவசர அவசரமாக கிளம்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையேல் ஒரு இரவு கண்டிப்பாக தங்க வேண்டிய நிலை.
இந்நிலையில் #இண்டிகோ நிறுவனம் வரும் மார்ச் 29ம் தேதி முதல் தூத்துக்குடி சென்னை இடையே இரவு நேர விமான சேவையை துவங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி சென்னையில் இருந்து தினமும் மாலை 6:15 மணிக்கு தூத்துக்குடி புறப்படும் விமானம் இரவு 7:55 க்கு தூத்துக்குடி வந்தடையும். பின்னர் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:15 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 9:45க்கு சென்னை சென்றடையும். இந்த இரவு நேரச் சேவையானது வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் துவங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
தூத்துக்குடி விமான நிலையம் 2004ம் ஆண்டில் இருந்துதான் வணிக முறையில் மிகவும் வெற்றிகரமாக செயல்படத் துவங்கியது. அப்போதிருந்தே தூத்துக்குடியில் இருந்து இரவு நேர விமான சேவை துவங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. பின்னர் நடந்த விமான நிலைய விரிவாக்கத்தில் இதற்கான பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு இப்பொழுது இரவு நேர விமான சேவை துவங்கப்பட்டிருப்பட இருப்பது மிகவும் வரவேற்க்கத்தக்க ஒன்றாகும். இந்த சேவை தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமையும்.