சென்னை,
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்கும் வகையில் பல வண்ணங்களில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் 975 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4,085 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக, மாநகராட்சி சார்பில் வாக்குச்சாவடி மையங்களில், குடிநீர் வசதி, மின் வசதி, கழிவறை, கைப்பிடியுடன் கூடிய சாய்தளம், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வசதி, வாக்காளர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்கும் வகையில் பல வண்ணங்களில் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வண்ணமிடப்பட்ட பாதைகளின் வழியே வாக்காளர்கள் செல்ல உரிய வண்ணம் கொண்ட வழிகாட்டிப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்க, மிகவும் உதவிகரமாக அமைந்திடும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.