சென்னை,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரகலாத் சர்தார் (வயது 42). கட்டுமான தொழிலாளியான இவரது முதல் மனைவி இறந்து விட்டார். 2-வதாக மேற்குவங்காளத்தை சேர்ந்த பிங்கி (36) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னை வந்தனர். சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் இருவரும் வேலை பார்த்தனர்.
சந்தோஷமாக வாழ்ந்த இவர்களது வாழ்க்கைக்கு மது எமனாக மாறியது. இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு இருவரும் ஜோடியாக அமர்ந்து மது அருந்தினார்கள். சந்தோசமாக மது அருந்த தொடங்கிய இருவரும் போதை அதிகமானவுடன் அடிதடி சண்டையில் இறங்கினார்கள்.
பிரகலாத் சர்தார் மனைவி பிங்கியை கழுத்தை நெரித்துக்கொல்ல முற்பட்டார். உயிருக்கு போராடிய பிங்கி திடீரென்று அருகில் இருந்த கத்தியை எடுத்து சர்தாரின் கழுத்தில் குத்திவிட்டார். ரத்த வெள்ளத்தில் சர்தார் கீழே சாய்ந்தார். அவரை சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சர்தார் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால் கத்தி குத்தப்பட்ட இடத்தில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் சர்தார் மீண்டும் மயங்கி விழுந்தார். இதனால் அவரை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் சர்தார் பரிதாபமாக இறந்துபோனார்.
இந்த சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கணவனை கத்தியால் குத்திக் கொன்றதாக பிங்கி கைது செய்யப்பட்டார்.