அண்ணாமலைநகர்,
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவித்தது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும் அரசு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டது.
மற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வசூலிக்கப்படுகிறது. ஒரே கல்லூரியில் இரு வேறான கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், மற்ற அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பது போல், இங்கேயும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கடந்த ஏப்ரல் 11-ந்தேதி முதல் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 25-ந்தேதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன் அறிவித்தார். மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் இருந்து உடனடியாக காலி செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
ஆனால் இதை ஏற்க மாணவர்கள் மறுத்து விட்டனர். மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கார் ஷெட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ள சூழ்நிலையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியை உடனடியாக திறப்பதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாணவர்களுக்கான விடுதி இன்று மாலை முதல் இயங்கத் தொடங்கும் என்பதால் மாணவர்கள் உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.