சென்னை,
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலையை சமாளிக்கும் நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரையில் தமிழகம் முழுவதும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் கொரோனா விதிகளை பின்பற்றி திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் சுகாதார அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.