தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் உழைப்பு, பண்பு, பணிவால் என்றைக்கும் ஓங்கி நிற்பார் மு.க.ஸ்டாலினுக்கு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்

முதல்-அமைச்சர் தனது உழைப்பு, பண்பு, பணிவால் என்றைக்கும் ஓங்கி நிற்பார் என்றும், பொய் பிரசாரத்தால் அவரை வீழ்த்தமுடியாது என்றும் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய மாநிலங்கள் அனைத்தோடும் ஒப்பிடுகையில் தமிழகம் ஆளுமை திறனில் முதல் இடம் பெற்ற மாநிலமாக விளங்குவதாக மத்திய அரசு நடத்தியிருக்கும் ஆய்வின் முடிவுகள் பாராட்டியிருப்பதை கண்டு பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும், அ.தி.மு.க. அரசு மீதும் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதே தரவரிசை பட்டியலில் பாராட்டத்தக்க இடத்தை பெறாமல் தமிழகம் கீழே தள்ளப்பட்டிருந்தால், அதை தூக்கி வைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக முழங்கிக்கொண்டிருப்பார் மு.க.ஸ்டாலின். 6 நாளில் கலைந்து விடும் என்று ஆசை கோட்டை கட்டியிருந்த மு.க.ஸ்டாலின் ஆயிரம் ஆண்டுகள் நிலைபெறும் அரசாக இந்த அரசு சாதனை புரிந்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி மனம் புழுங்கி அறிக்கை வெளியிடுவது வெட்கக்கேடானது.

2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை முன்னிலைப்படுத்தியதால் கிடைத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையால்தான் மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிறாரே தவிர தனது சொந்த செல்வாக்கால் பெறவில்லை. இலங்கை தமிழர்கள் வாழ்வில் எண்ணற்ற துயரங்களை ஏற்படுத்திய மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க.வுக்கும் இலங்கை தமிழர் நலன் குறித்து பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

பல ஆண்டுகள் மத்திய ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க பங்கு வகித்திருந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தரவில்லை. இந்த நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் மக்களால் மன்னிக்க முடியாத குற்றங்கள் அல்லவா. சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாமல் அந்த மக்களின் வாக்குகளை பெறவேண்டும் என்ற குறுகிய சிந்தனைக்குள் அடைபட்டுக்கிடக்கும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை போராட்ட களமாக்க முயற்சித்தால் அது அவருக்கு பெரும் தோல்வியாகவே முடியும்.

முதல்-அமைச்சரை, மு.க. ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான பிரசாரத்தைக் கொண்டு வீழ்த்த முயற்சித்தால் அது பயனளிக்காது. முதல்-அமைச்சர் தனது உழைப்பாலும், பணிவாலும், பண்பாலும் என்றைக்கும் ஓங்கிதான் நிற்பார். மக்கள் செல்வாக்கை பெறுவார். அரசின் அறிக்கைகளை படிப்பதில்லை. நடுநிலையான புள்ளி விவரங்களை புரிந்துகொள்வதில்லை. கடந்த கால நிகழ்வுகளை நினைவில் கொள்வதில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எதையும் ஒரு பொறுப்பற்ற பார்வையோடு அணுகும் மனநிலையில் மு.க.ஸ்டாலின் இருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து