தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் நடைபயிற்சியின்போது வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவண்ணாமலை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

ஏற்கனவே 2 கட்ட பிரசாரத்தை முடித்த அவர் 3-வது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் நேற்று முன்தினம் தொடங்கினார். நேற்ற்உ மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில், இன்று திருவண்ணாமலை தேரடி வீதியில் கடலை கடை சந்திப்பில் இருந்து முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். தங்கள் ஊரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டதை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஓடி வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொதுமக்களின் அன்பால் திளைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது வரவேற்வை ஏற்றபடியே தேரடி வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் கூடிநின்ற பொதுமக்களிடம் திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் எ.வே.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முதல்-அமைச்சரை அருகில் பார்த்த உற்சாக மிகுதியில் அவருடன் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்துக்கொண்டனர். மேலும் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் அங்கு வியாபாரிகளின் குறைகளை கேட்டறிந்தார்.