தமிழக செய்திகள்

ரமலான் நோன்பு கஞ்சிக்கு அரசு சார்பில் 8,700 டன் அரிசியை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசுக்கு இதனால் 20 கோடியே 88 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என கூட்டுறவு துறை தகவல் தெரிவிக்கின்றது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை போலவே, 2026-ம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

2026-ம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிவாசல்களுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 8,700 டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 20 கோடியே 88 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதனை கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.