சென்னை,
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை நாகர்கோவிலிலும், மாலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். பின்னர் நேற்று இரவு விருதுநகர் ஆர்.ஆர்.நகர் ராம்கோ விருந்தினர் மாளிகை யில் தங்கினார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு விருதுநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகி றார். அதற்காக விருதுநகரில் மதுரை செல்லும் நான்குவழிச் சாலையில் சத்திரரெட்டியபட்டியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), அசோகன் (சிவகாசி), தங்கப் பாண்டியன் (ராஜபாளையம்), விஜயபிரபாகர் (விருதுநகர்), மகாலிங்கம் (ஸ்ரீவில்லிபுத்தூர்), கடற்கரைராஜ் (சாத்தூர்) ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி மதுரை மாவட்டம் திருமங்கலம் வருகிறார். அங்கு மாலை 4 மணிக்கு ராயபாளையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் 9 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
மூர்த்தி மதுரை (கிழக்கு), பழனிவேல் தியாகராஜன் (மத்தி), தளபதி (வடக்கு), பூமிநாதன் (தெற்கு). ரகுபாலாஜி (மேற்கு), மணிமாறன் (திருமங்கலம்), கிருத்திகா (திருப்பரங் குன்றம்). வெங்கடேசன் (சோழவந்தான்), சரவணக்குமார் (உசிலம்பட்டி) ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக அங்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலூர் தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை நகருக்குள் வருகிறார். மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட டி.வி.எஸ்.நகர் பாலம் பகுதியில் இருந்து வில்லாபுரம் ஜெயவிலாஸ் வரை ரோடுஷோ மூலம் வாக்காளர்களை சந்திக்கிறார். தொடர்ந்து அவர் இரவு 7 மணிக்கு மேல் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.