சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீடூழி வாழ மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “சமூக நீதியையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இருகண் எனக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அண்ணன் தளபதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்திச்செல்ல விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.