சென்னை,
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 284வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராகும், ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகும் கமலா ஹாரிஸுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தமிழகத்துக்கு கமலா ஹாரிஸ் பெருமை சேர்த்துள்ளார்.
இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.